Thursday, April 23, 2020

அலகு.1 Maha Vishnu (திருமால்)

பரிபாடல் (1)

(Paripadal) 

Maha Vishnu | Hindu gods, Durga goddess, Vishnu
இந்தப் பாடல் திருமாலைப் பலராமனோடு இணைத்து இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் காட்டிப் புகழ்கிறது. நானும் உன்மீது காம வேட்கை கொண்டுள்ள என் சுற்றமும் உன்னோடு ஒன்றி உன் காலடியில் நாளெல்லாம் கிடக்கவேண்டும் என ஏங்கி உன்னைப் போற்றுகின்றேன். வாய்மொழிப் புலவனே! அருள் புரிய வேண்டும் – என்று வேண்டிப் பாடல் முடிகிறது.

நாஞ்சில் ஒருகுழை ஒருவன் (பலராமன்)
அச்சம் தரும் ஆயிரம் தலையை உடைய பாம்பு தீயை உமிழும் திறமையோடு உன் தலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. மாமைநிறம் கொண்ட மலர்மகள் உன் மார்பில் வாழ்கிறாள். நீயோ வெண்சங்கு போன்ற வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறாய். வானளாவிய பனைமரம், அழகு மிக்க யானை இரண்டையும் கொடியாகப் பிடித்துக்கொண்டுள்ளாய். வாய் வளைந்திருக்கும் நாஞ்சில் என்னும் கலப்பையை ஒரு காதில் மட்டும் குழையாக மாட்டிக்கொண்டுள்ளாய்.  
பாடல்
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5
அருமறைப் பொருளே!
நீ, 
  • எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன். 
  • பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன். 
  • அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன். 
  • அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணி, கௌவுத்துவ-மணி) உடையவன். 
  • பெரிய மலை பற்றி எரிவது போன்ற பொன்னிழையாலான உடுக்கை-ஆடை உடையவன். 
  • கருடச்சேவல் அழகு தரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவன். 
  • உன் ஏவலின்படி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமறையின் பொருளாக விளங்குபவன்.
இப்படி விளங்குபவனே!
பாடல்
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை 10
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.
 (அராகம் என்னும் செய்யுள் உறுப்பு)
வல்லின ஒற்று புணரொற்றாக வராமல் இசை முடுகி வரும்படிப் பாடப்பட்ட பாடல் இது. இந்த முடுகில் வரும் தமிழுக்கும் பொருள் உண்டு. இப்படி முடுகிசைக்குள்ளும் முடுகி வருபவன் திருமால்.
பாடல்
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20
றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.
அருளல் வேண்டும்


  • சொல்லச் சொல்ல அடங்காத பெரும்புகழை உடையவன் நீ.
  • ‘போரிவேன்’ என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களின் கொட்டத்தை அடக்கிப் போரில் வென்றி கண்ட அண்ணல் (பெருந்தலைவன்) நீ.
  • காமன், பிரமன் என்னும் இருவர்க்கும் தந்தை நீ.
  • ஒளிரும் அணிகலன்களை பூண்டிருக்கும் திருமால் நீ.
  • மயக்கம் இல்லாமல் எல்லாவற்றையும் உணரவல்ல முனிவர்க்கும் நீ எதற்கு வந்திருக்கிறாய் என்பது தெளிவாகத் தெரியாது. அப்படிப்பட்ட மரபினை (கால்வழியை) உடையவன் நீ.
அப்படிப்பட்ட உன்னை இன்ன தன்மை உடையவன் என்று சொல்லுதல் எனக்கு எளிதாகுமா?


  • சொல்லமுடியாத உன் அருமை எனக்கு நன்றாகத் தெரியும்.
  • என்றாலும் உன்னைப்பற்றி ஏதாவது சொல்லவேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு எழுகிறது.
உன் பெருமையைச் சொல்ல வல்லமை இல்லாத நான் இங்குச் சொல்வதை ஏதோ காற்றில் பறக்கும் மெல்லிய சொற்கள் என வெறுக்காமல் எனக்கு அருள் 
புரிதல் வேண்டும். திருமகளை மார்பிலே மறுவாக வைத்திருப்பவனே! அருள் புரிதல் வேண்டும்.
பாடல்
சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
‘பொருவேம்’ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்
இவையெல்லாம் நீ


  • அந்தணர் வெற்றியும் சிறப்பும் மிக்க ஒழுக்கநெறி கொண்டவர். அவர்கள் காப்பாற்றும் அறநெறியும் நீ. 
  • ஆர்வமுடன் தேடுபவர்களுக்கு அளி தரும் வள்ளலும் நீ.
  • திறனில்லாதவர் திருத்தும் தீதற்ற சிறப்பினை உடைய மறச்செயலும் நீ. 
  • மறம் கொண்ட பகைவரை வருத்துபவனும் நீ.
  • வானத்துக்கு அழகு செய்யும் நிலவொளியைத் தரும் நிலாவும் நீ. 
  • சுட்டெரிக்கும் வெயில் தரும் கதிரவனும் நீ.
  • ஐந்து தலைகள் கொண்டவனாக விளங்குபவனும் நீ. 
  • சிங்கமாகத் திகழ்பவனும் நீ.
  • எல்லா நலமும் பொருந்தியதாகக் குற்றமற்று விளங்கும் விளைநிலமும் நீ. 
  • விளையாத பூமியும் நீ. 
  • இவற்றில் வரும் மணமும் நீ.
  • வலிமை மிக்க மேகம் நீ. 
  • மேகம் தவழும் விசும்பு நீ. 
  • விசும்பு தொட்டுக்கொண்டிருக்கும் நிலமும் நீ. 
  • நிலத்தில் உயர்ந்திருக்கும் இமயமலையும் நீ.
பாடல்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.
மன்னுயிர் முதல்வன்
அதனால் 
நீ இன்னவரைப் போன்றவன், இந்தத் தன்மையன், அந்தத் தன்மையன் என்றெல்லாம் காணாமையால், பொன்னணிச் சக்கரத்தை வலப்புறம் கொண்டுள்ள மன்னுயிர் முதல்வன் எனக் கண்டேன். 
ஆதலின் நினக்கே உரித்தான இத் தன்மையும் அதன் புகழுமாகப் பொலிவுற்று வாழ்வாயாக!
பாடல்
அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
உன் நிழல்


  • உன்னைப் போன்றது உன் புகழ். 
  • பொன்னைப்  போன்றது உன் உடை. 
  • உன்னிடம் இருப்பது கருடப்புள். 
  • புரிசங்கு. 
  • பழிப்போரை அழிக்கும் சக்கரம். 
  • மணி பதித்த மார்பணி. 
  • எண்ண முடியாத புகழ். 
  • எழில் திகழும் மார்பு.
பாடல்
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
வேண்டுதல்


  • இவ்வாறெல்லாம் இருக்கும் உனக்கு உன் அடியுறையாக (செருப்பாக) நான் இருப்பேன். 
  • என்னோடு சேர்ந்து உன்மேல் காமம் கொண்டுள்ள என் சுற்றமும் ஒன்று சேர்ந்து இருக்கும். 
  • அவ்வாறு நாங்கள் நாளெல்லாம் உன்னொடு ஒன்றிக் கிடக்கவேண்டும் என்று நெஞ்சில் கிடக்கும் ஏக்கத்தோடு பரவுகின்றேன். 
  • திருவடி நிழலைத் தொழுது வாழ்த்துகின்றேன். 
வாக்குத் தவறாத வாய்மொழிப் புலவனே! வழங்குவாயாக!
பாடல்
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழிப் புலவ! நின் தாழ்-நிழல் தொழுதே; 68

கடவுள் வாழ்த்து
கீரந்தையார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்.

No comments:

Post a Comment

மாணிக்கவாசகர் Thiruvembavai Padalgal 01-20 (திருவெம்பாவை பாடல்கள் 01-20)

திருவெம்பாவை பாடல் 20 போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்ந...