பரிபாடல் (3)
(Paripadal)
திருமால்
ஒன்பது என்னும் சொல்லையும், ஒன்பதைக் குறிக்கும் தொண்டு என்னும் சொல்லையும் தொல்காப்பியம் பயின்று காட்டுவது போல இது பயின்று காட்டுகிறது.
அரை என்னும் ஒன்றில் பாதியை இது பாகு எனக் குறிப்பிடுகிறது.
அ
மாயமானவனே!
மாயம் செய்பவனே!
திருவடி நிழலைத் தந்து மறுபிறப்பு இல்லாமல் செய்பவனே!
மணி போன்ற நீலநிறம் கொண்டவனே!
ஆ
(புராணக் கதைச் செய்திகள் – விளக்கம் உ. வே. சா. குறிப்பு)
தீ, காற்று, ஆகாயம், நிலம், நீர் – ஐந்தும்,
சூரியன், நிலா, அறநெறி. (மூன்றும்) (5+3=8 அட்டமூர்த்திகள் – ஈசன் வடிவம்)
ஐவர் (வியக்கும் தன்மை பெற்ற ஐவர்)
திதி என்னும் தாய் பெற்ற சிறுவர் (அரக்கர்)
விதியின் மக்கள் (12) (ஆதிப்பிரமன் நினைவில் தோன்றிய பிரமர் 10 பிரமர். அவர்களில் ஒருவர் காசிபர். காசிபன் மக்கள் 12 ஆதித்தர்)
எண்மர் (வசுக்கள் 8 பேர்) (8)
கபிலர் 11 பேர் (11) (செந்நெறியைத் தீர்மானிக்களும் உருத்திரர் 11 பேர்)
தாமா என்னும் உருப்பசிக் குதிரை பெற்ற இருவர் (2) (உருப்பசி குதிரை வடிவில் தோன்றிளாள். அவள் அழகில் மயங்கிய ஆதித்தன் தானும் ஆண்குதிரை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தான், அப்போது விழுந்த இரண்டு விந்துத் துளிகளால் பிறந்தவர் இருவர்)
(33 தேவர் 12 + 8 + 11 + 2 = 33)
தருமன் (எமன்)
மடங்கல் (எமனுக்குக் குற்றேவல் =செய்பவர்)
மூவேழ் 21 உலகம்,
மன்பது = எஞ்சி நிற்பவை
இவை அனைத்தும் உன்னுள் பரந்து கிடக்கின்றன.
இ
வாய்மொழி நூல் தந்தவன்
வாய்மொழி என்னும் ஓடையில் மலர்ந்தது தாமரை
தாமரையில் பிறந்தவன் பிரமன்
பிரமனின் தந்தை நீ என்று அந்தணர் வேதம் சொல்கிறது
ஈ
அமரர் கையில் பூண் அணிந்தவர். அமிழ்தத்தைப் பிடுங்கிக் கொண்டவர்கள்.
உன் தாய் வினையை
அமரர் அசுரர் ஆகிய இருவர் கடைந்தெடுத்த அமிழ்தத்தை ஒருவரை ஏமாற்றி ஒருவருக்கு அளித்த மாயன் நீ
இப்படித் தாயின் துன்பத்தைப் போக்கியது ஒரு புள்
அந்த ஆண்கருடப் பறவையைக் கொடியாக்கி உயர்த்திக்கொண்டவன் நீ
உன் திருவடியைத் தொழாதவர்களும் இருக்கிறார்களா? இல்லை.
உ
கீழ் ஏழ் உலகில் அடியைப் பதித்தவன்
தீ, எமன்-தூதர், எமன், 1000 கதிர் பரப்பும் சூரியன், நீ
ஊழிக் காலத்தைக் கையிலுள்ள சக்கரமாக்கிச் சுழற்றுபவன்.
பன்றி உருக்கொண்டு பெருநிலத்தை உழுதவன்
என்றும்
ஊ
பிரமனைத் தோற்றுவித்த நீ பிரமனாக அன்னச்சேவல் உருவில் வானமெல்லாம் பறந்து வானத்தில் ஒழுகும் நீரை உண்டவன்
என்றும்
எ
வான-ஞாலத்தில் வாழும் தேவரும், அவர்களில் எட்டு தெய்வப் புலவர்களும் உன்னைப் பாடினர். அவர்கள் உன்னைப் பாடிய வகையைப் பின்பற்றி நான் பாடிய பாட்டு இது.
ஏ
கூந்தல் என்னும் குதிரை வடிவில் வந்தவனைக் கொன்று கூந்தல் என்னும் பெயரைப் பெற்றவன் நீ
இரு சாரார் கடைந்த அமிர்தத்தை ஒரு சாரார்க்கு வழங்கி நடுவுநிலைமை திரம்பிய ஒரு கையை உடையவன்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் – என்று கைகள் கொண்டவன்.
ஆம்பல் Infinitive என்னும் எண்ணிக்கை இல்லாத உடம்பினைப் பெற்றவன் நீ
ஒ
உனக்கு ஒப்பானவர் உன்னைத் தவிர வேறு யாராவது இருப்பதை நீ அறிவாயா?
பண்டைய மரபில் தோன்றிய முதுமொழிக்கெல்லாம் முதல்வன் நீ
உன்னைப் பற்றிக் கேட்டேன்.
என் வலிமை, மனம், உணர்வு, - அனைத்துக்கும் தெரியவில்லை.
ஓ
நிழல், ஒளி, கதிர்,
பிறை, நிறைமதி
உண்டி, உடையணி
என்று எல்லாமாக தேவர்களுக்கே முதல்வனாக விளங்குபவன் நீ
ஔ
நீ நிலத்தைப் பன்றி உருவெடுத்து உழுதபோது பயந்தோடிக் கடலில் ஒளிந்துகொண்ட அவுணர்களை யெல்லாம் அழித்து முதல்வன் ஆகித் திகழ்பவன் நீ
க
உனக்குப் பகைவர் என்றோ, நண்பர் என்றோ பாகுபாடு இல்லை
கா
ஆயிரம் அவுணர்களின் தலையாகிய பாம்புகளை உண்ட கருடப்புள்-கொடி கொண்டவன் நீ.
கி
ஓ – என்னும் பழங்காலத்துக்கு முதல்வன் நீ
ஏஎ – என்று சொல்லி உன்னை அறிகின்றோம்
நீக்குள் சூடு
பூக்குள் மணம்
கல்லுக்குள் மணி
சொல்லிக்குள் வாய்மை
அறத்துக்குள் அன்பு
மறத்துக்குள் வலிமை
வேதத்துக்குள் மறைபொருள்
பூதத்துக்குள் முதல்
சூரியன் ஒளி
நிலாவின் அளி (கொடை)
அனைத்தும் நீ
அவற்றுக்குள் இருப்பவனும் நீ
மறதியும் நீ
அதலால் மாயமாய் இருக்கிறாய்.
கீ
தொழிலில் முதல், இடை, கடை எல்லாம் நீ
பிறவாதவனும் நீ
பிறந்தவனும் நீ
உன்னைப் பெற்றெடுத்தவர் யாருமில்லை
பூவை என்னும் காயாம்பூ நிறம் கொண்டவன்
அருள் உன் குடை
அறம் உன் செங்கோல்
மூவேழ் (21) நிலத்தையும் பாதுகாப்பவன்
கூ
பாழ் (0), கால் (1/4), பாகு (1/2), ஒன்று (1), இரண்டு (2), மூன்று (3), நான்கு (4), ஐந்து (5), ஆறு (6), ஏழு (7), எட்டு (8), தொண்டு (9), - என்று நான்கு வகையான ஊழி எண்களைச் சொல்லித்தருபவன் நீ
பாழ் என்னும் 0 ஒருவகை
பின்னம் ஒருவகை
அளவு காட்டும் எண் ஒருவகை
அளவு காட்டாத தாமரை, ஆம்பல், வெள்ளம் போன்ற எண்கள் ஒருவகை
ஆக நான்கு வகை
கெ
கருமை, வெண்மை, பொன்மை, பசுமை, - நிறம் நீ
விலக்கும் இடக்கை, வளைக்கும் குடங்கை, கோக்கும் கோவலம், காக்கும் காவலம், - நீ
காணாதவை, நினைவில் வருபவை - நீ
மாய மன்னன், உலகாள் மன்னன் – நீ
புலவன், பாணன் – நீ
மாலை அணிந்தவன் – நீ
தோல்வி காணாதவன் – நீ
பொன்னிறப் பட்டாடை, வலம்புரிச் சங்கம் – கொண்டவன் நீ
திருமகளின் கணவன் -நீ
வெற்றி வீரன் - நீ
கே
உலகம் தோன்றாத காலத்தில் நிலவிய வெள்ளத்தில் பூத்த தாமரைப் பொகுட்டில் உன் நேமிச்சக்கர நிழல் படியும்படி வாய்மொழி மகனாக நின்பவன் நீ.
அந்த நிழல் எனக்கு வேண்டும்.
3. திருமால்
அ
மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே!
ஆ
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
இ
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
'வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை.
ஈ
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
உ
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும்,
ஊ
'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,
எ
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30
ஏ
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
ஐ
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை.
இரு கை மாஅல்! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
ஒ
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ?
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
ஓ
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
ஔ
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
க
அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
கா
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! 60
கி
ஓ! 'எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்:
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
கீ
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:
கு
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
கூ
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை: 80
கெ
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
இட வல! குட வல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பெரு விறல் மள்ள! 90
கே
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!
திருமால்
கடவுள் வாழ்த்து
பாட்டு - கடுவன் இளவெயினனார்
இசை - பெட்டனாகனார்
பண் – பாலையாழ்



No comments:
Post a Comment