Wednesday, April 22, 2020

அலகு.1 செவ்வேள்

பரிபாடல் (9)

(Paripaadal)

வள்ளி தெய்வானையுடன் முருகன்
இந்தப் பாடல் செவ்வேளை விளித்து முன்னிலைப்படுத்து அவன் பெருமைகளைச் சொல்கிறது. ஊடல் பகுதிகளை வள்ளி, தெய்வசேனை ஊடுவதாகப் பரிமேலழகர் இப் பகுதிக்கு உரை எழுதியுள்ளார்.
1
இந்தப் பெருநிலம் ஆடாமல் இமயமலை வடதிசையில் இருக்க இந்திரன் காத்துவந்தான். இமயம் ஓங்கி உயர்ந்த மலை. தெய்வம் வாழும் மலை. அச்சம் தரும் மலை. தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் படைத்த பெரிய வாரியாகிய கங்கை வானத்திலிருந்து இறங்கும்போது சிவபெருமானின் விரிந்த சடையில் தங்கியதால் சினம் தணிந்தது. கங்கை நீரைத் தலையில் அணிந்தவன் சலதாரி. அவன் நஞ்சைச் தொண்டையில் வைத்திருக்கும் அண்ணல். ஆரல் என்னும் கார்த்திகை மீனிலிருந்து சிவனுக்கு மகனாகப் பிறந்தவனே!
2
கரு கரு இமையும் கண்ணும் கொண்டவள் வள்ளி. அவளை மறித்து அவளது தோளைக் களவு நெறியில் நீ மணந்தாய். அப்போது உடலில் ஆயிரம் கண் கொண்ட இந்திரனின் மகள் தேவசேனை முதுவேனில் காலத்தில் பெய்யும் மழை போன்ற கண்ணீரைத் திருப்பரங்குன்றத்தில் மழையாகப் பொழிந்தாள்.
3
தமிழ்நெறி மணம் களவு நெறியிலும், கற்பு நெறியிலும் அமையும். தண்டமிழை ஆராயதவர் களவுநெறியைக் குறைகூறி, இக் குன்றத்தின் பயனைத் துய்க்கமாட்டார்கள். இது அவர்களின் தவறு அன்று. உண்மை இப்படி இருக்கிறது. நான்கு மறைகளை (நான்கு வடமொழி வேதங்கள்) விரித்துப் பேசும் வாய்மொழிப் புலவர்களே! (தமிழ்நெறி பற்றி அறியாமல் பேசும் புலவர்களே) கேளுங்கள். சிறந்தது ஒத்த காதலில் அமையும் காம இன்பமே. அதில் விரும்புபவர்கள் ஒத்துப்போனால் உடலுறவு நிகழும். பிணக்குப் போட்டுக்கொண்டு புலவியால் கற்பு சிறப்படையும். பரத்தை உறவால் புலவி தோன்றும். அப்போது கணவன் இரத்தலும், மனைவி ஈதலும் நிகழும். இது பணபுதான். தமிழ்நெறியில் சுணங்கறை என்னும் பாங்கு உண்டு. சுணங்கு = காலம் தாழ்த்து, அறை > அறு = பேசி அறு. பேசி அறுத்துக் காலம் தாழ்த்துதல் சுணங்கறை. பெண் தன் மாதவிடாய் காலத்தில் செந்நிறப் பூவை நாளணியாக அணிந்துகொண்டு தன் நிலையைப் புலப்படுத்துதல் ஒருவகைச் சுணங்கறை. கணவன் நடுங்கும்படி மனவி உரையாடுதல் மற்றொரு சுணங்கறை. கணவனுடன் ஊடுதல் இன்னொருவகைச் சுணங்கறை. அதனால் கணவனைப் பிரிய மனமில்லாத மகளிர் கணவனுடன் மாறுபாடு கொண்டு துனி என்னும் பிணக்குச் சண்டை போட்டுக்கொள்வதில் தவறு இல்லை. இது தள்ளாப் பொருள்நெறி.
4
வெள்ளப்புனல் கரையிலிருந்த சந்தன மரங்களைச் சாய்த்துக்கொண்டு பாய்ந்தது. அவன் தன் சந்தனம் பூசிய மார்பில் புனல் கொண்டுவந்த சந்தனத்தின் வைரக்கட்டைகளைப் புகைத்துப் புகை ஊட்டியிருந்தான். பூ மாலையும் ஒளிரும் வயிரமாலையும் அணிந்திருந்தான். ஊடும் மனைவி அவனைத் தொழுது வினவுகிறாள். “மாயா! உன் தவறு ஒன்றும் இல்லை. என்னைப்போல் செம்மை இல்லாதவள் அழகை உண்ணலாமா? உண்டுவிட்டு வந்து திருவுடைய என் மென்தோளில் தங்கி நுகரலாமா” – என்றாள்.
5
நீ இங்கு வந்துவிட்டதால், பல் இளித்தும் உன்னை அடையாத மகளிர், உன் மழை பொழியுமா என்று வருந்திக்கொண்டிருப்பர். அவர்களைப் போய்க் காப்பாற்று. ஐயனே! நான் பிரிவு என்னும் கொடிய நோய் கரையாமல் துன்புற்றபோது ஒருத்தி என்னைக் கைகாட்டி மாறுபாடு கொண்டு என்னை விட்டு விலகி நின்றாள் – என்றாள் மனைவி. அப்போது அவள் முன் நின்ற கணவனாகிய மன்மதவேள் போன்றவன் தன் தலையை அவள் காலடிமேல் வைத்து வணங்கினான். (தன் தலையிலணிந்த கண்ணிமாலையை அவள் காலடிக்குத் திறையாய்க் கொடுத்தான்) அப்போது அவள் “வருந்தாதே” என்று சொல்லி அவனுக்குத் தன் மார்பைக் கொடுத்தாள். அவன் அணைத்தான். அவள் “என்னை நெருங்காதே” என்று கூறி அவனை அணைத்துக்கொண்டு, தன் மாலையால் அடித்தாள். அப்போது மனைவி வளர்த்த மயிலும், காதல்-மனைவி வளர்த்த மயிலும் இணைந்து பறந்தன. இருவரின் வளர்ப்புக் கிளிகளும் ஒன்றோடொன்று மழலை-மொழி பேசிக்கொண்டன. இருவர் கொண்டையிலும் மலர்த்தேன் உண்ணும் வண்டுகள் இடம் மாறித் தேன் உண்டன. இப்படி வெறியாட்டம் ஆடும் முருகனின் குன்றம் பரிமாற்றம் கொள்ளும் நிலையினதாயிற்று.
6
ஒருவன்மீது காதல் கொண்ட இருவரின் மணமாலைகளும் மாட்டிக்கொண்டன. தலையிலணிந்த மாலைகளும் தடுமாற்றம் கொண்டன. அவர்களின் மார்போடு மார்பு மத்தாகி இடித்துக்கொண்டன. பூங்கோதையால் சுற்றப்பட்ட வரிப் பந்துகளை ஒருவர்மீது ஒருவர் வீசினர். அவர்களின் பேதை நெஞ்சம் பிறிதாகிக் கிடந்தது. அவர்கள் இருவருமே ஊதினாலே தள்ளாடும் மெல்லிய இடையை உடையவர்கள். ஒருவர் தலையை ஒருவர் பிடித்துக்கொண்டு “நூழில்” போர் செய்தனர். அது இரண்டு யானைகள் குளத்துக்குள் சண்டையிட்டுக்கொள்வது போல இருந்தது. 
7
இருவரும் வெற்றிக் களிப்போடு வரும் குதிரை போல வந்து ஒருவரோடு ஒருவர் தாக்கிக்கொண்டனர். தேரை வடம் பிடித்து இழுப்பது போலப் பிடித்து ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டனர். வில் வளைவது போல வளைந்து இருவரும் போரிட்டனர். அம்புகள் பாய்வது போலப் பாய்ந்து தாக்கிக்கொண்டனர். அவர்களது தோளில் அணிந்திருந்த வளையல்கள் சக்கரம் போலச் சுழன்றன. இவர்கள் இருவருமே மெல்லிய இயல்பினை உடைய மயில் போன்றவர்கள். 
8
ஒளி மிகுந்த, வலிமை மிக்க, மலை போன்ற, மார்பினை உடைய முருகனை வானவன் மகள் தேவசேனையின் தோழிமார் தம் மலர் போன்ற கண்கள் சுழன்றாட, பொருளில்லாத மடமொழிகளைப் பரிமாறிக்கொண்டு சுனையில் நீராடினர். 
9
சிலர் சுனைப்பூவில் தேன் உண்ணும் வண்டுகள் போல யாழிசை மீட்டினர். சிலர் மயில் போல ஆடினர். சிலர் குயில் போல இசை கூட்டித்தந்தனர். சிலர் ஆரவாரம் செய்தனர். இவை குன்றக் குறமகள் வள்ளி நடத்திய தும்பைப் போர் போன்று இருந்தது.
10
சூரபன்மனை அழித்த போராளியே! உன் குன்றத்தில் ஆடுவோர் தாமே சலிக்கும் அளவு ஆடினர், பாடுவோர் தாமே சலிக்கும் அளவு பாடினர். வல்லாரை வல்லார் கண்டு அடங்கினர். அல்லாரை அல்லார் கண்டு அடங்கினர். இப்படி ஆக்கிய மன்றக் கொடிகள் சுனைக்கரைகளில் பறந்தன.
11
விரும்பும் வேல், வென்று உயர்த்திய கொடி, கற்புக் கடம் பூண்ட இரு மனைவியர் காட்டும் அன்புரிமை – ஆகியவற்றைக் கொண்ட வியக்கத் தக்க குமரனே!
12
உன்னை வாயார வாழ்த்துகின்றோம். நெஞ்சாரப் பரவுகின்றோம். தலை வணங்கித் தொழுகின்றோம். உன் காலணியாக இருக்க விரும்புகின்றோம். இவற்றை எங்களுக்குப் பயனாக நாள்தோறும் தந்து நீ பொலிவாயாக.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
செவ்வேள்
1
இரு நிலம் துலங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,   5
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
2
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று, 10
தணி மழை தலையின்று, தண் பரங்குன்று.
3
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது:
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி:   15
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; 20
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;
சுணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே.
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்   25
கொள்ளார், இக் குன்று பயன்.
4
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும்    30
கேழ் இலார் மாண் நலம் உண்கோ, திரு உடையார்
மென் தோள்மேல் அல்கி நல்கலும் இன்று?
5
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!'
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின்   35
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை,
'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுகிறுக யாத்துப் புடைப்ப; 40
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
6
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்;     45
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள:
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; 50
7
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;
தேர் அணி மணி கயிறு தெரிபு வருவார்;
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்;
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்;
தோள் வளை ஆழி சுழற்றுவார்   55
மென் சீர் மயில் இயலவர்.
8
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் உடன் சுற்றி,     60
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
9
அறை அணிந்த அருஞ் சுனையான்
நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;
கோகுலமாய்க் கூவுநரும்,   65
ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று.
10
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்  70
அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், 75
செம்மைப் புதுப் புனல்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
11
மேஎ எஃகினவை;
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;   80
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர!
12
வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே.  85

கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பலையாழ்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டுப் பாடல்

No comments:

Post a Comment

மாணிக்கவாசகர் Thiruvembavai Padalgal 01-20 (திருவெம்பாவை பாடல்கள் 01-20)

திருவெம்பாவை பாடல் 20 போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்ந...