பரிபாடல் (5)
(Paripaadal)
புலவர் முருகப்பெருமானிடம் பொன்னும் பொருளும் வேண்டாமல், அன்பும் அறனும் வேண்டுகிறார். முருகப்பெருமானின் பிறப்பு-வளர்ப்பு, தோற்றம் முதலான கதைச் செய்திகள் இதில் கூறப்படுகின்றன.
1
செவ்வேள் என்னும் முருகப்பெருமான்,
கடல்நிலமே துகளாகும்படிக் கடலுக்குள் புகுந்தவன்.
மயிலில் ஏறிச் செல்பவன்.
போரிட்டு, தீப்பந்தம் விட்டெறிந்து, போரால் துன்புறும் சூரபன்மனை வெட்டி வீழ்த்தியவன்.
வெற்றி வீரர்களுடன் சேர்ந்துகொண்டு உயிரினங்களைக் கொன்று தின்ற மாய அரக்கர்களை எச்சமிச்சம் இல்லாமல் கொன்ற வேலை உடையவன்.
2
நாவலந்தண்பொழில் எனப்படும் தென்னகம், வடநாடு இரண்டுக்கும் இடையே இருந்த குருகுப் பறவையின் பெயர் கொண்ட பெரிய மலையை கிரவுஞ்ச-கிரியை உடைந்து மலையை வழியனுப்பிவைத்த ஆறு இளந்தலைகள் கொண்டவன்.
ஆறு தலைகளுக்கும் பன்னிரண்டு தோள் கொண்டவன்.
பகலவன் போல ஒளி மிக்கவன்.
தாமரையில் பிறந்தவன்.
அழிக்கும் கடவுளின் மகன்.
செம்மைக் கொடையாளி.
பேய்கள் விழாக் கொண்டாடி ‘சால்புடையவன், தலைவன்’ என்று போற்றி வெறியாட்டம் ஆடும் பெருந்தகை.
3
இவை உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல.
முருகா!
நீ எல்லை இல்லாதவன்.
இந்த உலகமும் நீ.
ஆதலின் உன்னைச் சிறப்பித்துப் போற்றுவதால் உனக்குச் சிறப்பு வரப்போவதில்லை.
சிறப்புக்கும் சிறப்பு நீ.
பிறப்பில் தாழ்ந்தவன் நீ.
என்றாலும், எல்லாரும் நின் ஆற்றலுக்கு உட்பட்டவர்கள்.
4
சிவன் முப்புரத்தை அழித்தான்.
அப்போது,
பிரமன் ஆதி அந்தணன் தேர் ஓட்டினான்.
வேதங்கள் குதிரை.
நிலவுலகம் தேர்.
நாகம் வில்லிலுள்ள நாண்.
மேரு மலை வில்.
அழலும் தீ அம்பு.
ஒரே அம்பில் மூன்று கோட்டைகளையும் தீப்பற்றி எரியச்செய்தவன்.
இந்தச் சினம் தணிய, தேவர்கள் வேள்வி செய்தனர்.
அவர்கள் அளித்த வேள்விப் பாகத்தை வாங்கி உண்டவன்.
அவன் இளங்கண் ஒன்றும் கொண்ட பார்ப்பான் (சிவன்).
5
சிவன் உமையுடன் கூடிக் காமப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தான்.
அது புணர்ச்சி இல்லாத புணர்ச்சி.
அப்போது அவன் நெற்றிக் கண் ஒரு வரம் தந்தது.
6
அந்த வரம் ஒரு கருவைத் தந்தது,
பெற்ற கருவை பிரமன் (விண்ணோர் வேள்வி முதல்வன்) இந்திரனுக்கு (விரிகதிர் மணிப்பூண் அணிந்தவனுக்கு) அளித்தான்.
இந்திரன் கைகளால் அதனை தாங்க முடியவில்லை.
எனவே இந்திரன் தன் கையிலிருந்த குடாரிப் (கோடாரி) படையால் அடித்து அதன் உருவத்தைச் சிதைத்தான்.
அது உலகம் ஏழுக்கும் அருள் புரியும் ஏழு பிண்டங்களாக (விலங்கு) மாறியது.
7
ஏழு மாதவ முனிவர்கள் சிதைந்த கருவைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் முதிர்ந்து தேய்ந்து தழுதழுத்த உடம்பினை (கழிந்த சேய் யாக்கை நொசிப்பு) உடையவர்கள்.
அவர்கள் அந்தத் தசைப் பிண்டங்களைத் தீ வேள்வியில் இட்டு எடுத்து, தம் மனைவியரிடம் தந்து உண்ணுமாறு வேண்டினர்.
8
ஏழு கன்னிமாருள் வடமீனாக விளங்கும் அருந்ததி உண்ணவில்லை.
ஏனைய ஆறு பேரும் உண்டனர்.
9
ஆறு பேரும் கருவுற்றனர்.
10
ஆறு பேரும் குழந்தை பெற்றனர்.
இமயமலை ‘நீலப்பைஞ்சுனை’யில் உள்ள ஆறு தாமரைப் பூக்களில் பெற்றனர்.
11
குழந்தைகளைக் கண்டு சினம் கொண்ட இந்திரன் தன் வச்சிரப் படையால் தாக்கினான்.
சிதைந்த ஆறு குழந்தைகளும் ஒன்று திரண்டு ஓருருவம் பெற்றது.
அப்படி உருவாகிய வெற்றிக் குழந்தை நீ.
12
இப்படி நிறைவடையாத உடம்பில் அமர்ந்துகொண்டு நீ விளையாடிய போரில் இந்திரன் தோற்றுப்போனான்.
உன் வெற்றியைப் பாராட்டி, அனல்-கடவுள் தன் உடம்பிலிருந்து பிரித்து வாரணம் என்னும் சேவலைக் கொடுத்தான். (எரியும் தீ போல் சிறகுகளைக் கொண்டது சேவல்). இந்திரன் (வானத்துச் செல்வன்) தன் உடம்பிலிருந்து பிரித்து மயிலைத் தந்தான். (ஆயிரம் கண் கொண்ட மேனி போல் மயில்)
எமன் (ஞமன்) தன் உடம்பிலிருந்து பிரித்து வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தான்.
அவ்வாறே பிறரும் அவரவர் உடம்பிலிருந்து பிரித்து விரும்பியதைத் தந்தனர்.
இதனால்
1. ஆட்டுக்குட்டி,
2. மயில்,
3. சேவல்,
4. வரிந்து கட்டிய வில்,
5. மரம்,
6. வாள்,
7. ஈட்டி,
8. குடாரி (கோடாரி),
9. கணிச்சி (மூவிலை-வேல்),
10. தீச்சட்டி,
11. மாலை,
12. மணி
என்று 12 கைகளில் 12 விருதுப் பொருள்களைக் கொண்டுள்ளாய்.
தாமரை மொட்டிலிருந்து இருந்த குழந்தைப் பருவத்திலேயே இந்திரன் (துறக்கத்து அமரர் செல்வன்) புகழ் வரம்பை நீ கடந்தவன்.
15
உன் குணத்தைச் சிலர் அறம் எனக் கொண்டனர்.
நிலைபெற்ற (தடுமாறாத) குணமுடைய மாதவர் உன்னை வணங்கினர்.
இவர்கள் உன் திருவடி நிழலை அடைந்தனர்.
· அழிக்கும் தீய நெஞ்சில் நீடித்த சினமுடையவர்களும், அறம் சேராமல் சீர்மை இல்லாமல் இருப்பவர்களும், அழிதவம் செய்வர்களும், மறுபிறப்பு இல்லை என்று சொல்லும் மடையர்களும் உன் நிழலை அடையமாட்டார்கள்.
16
உன் திருவடி நிழலில் சிலர் சேர்வர், சிலர் சேரமாட்டார்கள்.
ஆதலால் நான் உன்னை வேண்டுவதெல்லாம் பொன்னோ, பொருளோ, போகமோ அல்ல.
உன் அருள், அன்பு, அறம் ஆகிய மூன்றையும் தருக.
கடம்பமாலை அணிந்தவனே! தருக.
செவ்வேள்
கடவுள் வாழ்த்து
பாட்டு - கடுவன் இளவெயினனார்
இசை - கண்ணனாகனார்
பண் - பாலையாழ்
1
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய 5
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
2
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! 10
'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ!' எனப் பேஎ விழவினுள்,
வேலன் ஏத்தும் வெறியும் உளவே: 15
3
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்:
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்வு ஆகலும்,
பிறப்பினுள் இழிபு ஆகலும், 20
ஏனோர் நின் வலத்தினதே:
4
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
5
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, 30
6
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் அருள: 35
7
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
'மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி 40
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்
8
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: 45
9
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
10
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50
11
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
12
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
13
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; 60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,தாமரை
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், 65
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
14
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். 70
15
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
அழி தவப் படிவத்து அயரியோரும், 75
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
நின் நிழல்:
16
அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் 80
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!
கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்


No comments:
Post a Comment